hospital
Image Credits- Gulf News

கொரோனாவை வென்ற 106 வயது சவூதி மூதாட்டி..!

உலகலாவிய அளவில் கொரோனா வைரஸின் கோர தாண்டவம் இன்னும் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கும் இந்த காலகட்டத்தில் சில இளம் வயதினர் கூட கொரோனாவின் கோர பிடியில் சிக்கி உயிர் விடும் நிலையில் சவூதியை சேர்ந்த 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பின்னர் முழுவதுமாக குணமடைந்துள்ளார். இதை சவூதி சுகாதார அதிகாரி இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதிப்படுத்தினார்.

சவூதியிலுள்ள அரார் நகரில் வசிக்கும் இந்த வயதான மூதாட்டி, நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் கொரோனா வைரஸின் தாக்குதலை எதிர்த்து போரிட்டார் என்று வடக்கு மாகாண எல்லை சுகாதார செய்தித் தொடர்பாளர் ஃபஹத் அல்-அனாசி ஒகாஸ் தெரிவித்தார்.

இந்த வயதான மூதாட்டி எவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானார் என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. கொரோனா வைரஸ் பாதித்ததும் இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆச்சர்யத்தக்க வகையில் வெண்டிலேட்டரின் உதவியின்றி மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்று அல்-அனாசி கூறினார்.

மேலும் அல்-அனாசி கூறும்போது, இது குறித்து கேள்விப்பட்ட வடக்கு எல்லை பிராந்திய ஆளுநர் இளவரசர் பைசல் பின் கலீத் பின் சுல்தான் அவர்கள், வயது முதிர்ந்த மூதாட்டியை அழைத்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் என்று தெரிவித்தார்.

சமீபத்திய வாரங்களில், சவூதி படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருவதால், கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுப்பது குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை சவூதி சுகாதார அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் வயதானவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதினால் அவர்கள் இந்நோய்த்தொற்றுக்கு எளிதாக உள்ளாகிறார்கள். இதன் காரணமாக வயதானவர்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகுலுக்குவதற்கு எதிராக அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது.

அதுமட்டுமின்றி கடந்த வாரம், சவூதி அதிகாரிகள் நாடு முழுவதும் ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவை முழுமையாக நீக்கிவிட்டு, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்க அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News

Related posts