hospital
Image Credits- Saudi Gazette

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான பிரத்யேக கள மருத்துவமனை ஜித்தாவில் திறப்பு..!

சவூதி அரேபியாவிலுள்ள ஜித்தாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான கள மருத்துவமனையை அமைத்து, அதற்கான சோதனை ஓட்டத்தை ஜித்தா சுகாதார ஆணையம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியுள்ளது.

இந்த மருத்துவமனையானது வடக்கு ஜித்தாவில் உள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரியின் கீழ் வரும் ஜித்தா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தின் நிலத்தில் 8,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

இது பல அரசு துறைகளின் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்புடன் திறக்கப்பட்டதோடு, மிதமான மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகள் மற்றும் கொரோனா தொற்றுநோயின் லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களும் முழுவதுமாக குணமடையும் வரை இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையானது 500 படுக்கை வசதிகளுடன் முழுமையான செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இது ஆய்வகம், மருந்தகம், ரேடியாலஜி, மற்றும் மருத்துவ துறை சார்ந்த அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.

இங்கு கொரோனா நோயாளிகளை அனுமதித்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு திறமையான மருத்துவ மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுகாதாரத் துறை தகவலின் படி, மருத்துவ உபகரணங்களின் செயல்திறன் மற்றும் மருத்துவப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இத்திட்டத்தின் முதல் கட்டமாக 20 படுக்கைகளுடன் சோதனை ஓட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Saudi gazette

Related posts