malls
Image Credits- Khaleej Times

சவூதி வணிக நிறுவனங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்..!

சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை ‘மே 31 முதல் ஜூன் 20 வரை’ இரண்டாம் கட்டமாக படிப்படியாக தளர்த்துவதாக சவூதி அரசு அறிவித்திருந்த நிலையில் இங்குள்ள வர்த்தக மையங்கள், மால்கள், சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை நகராட்சி மற்றும் கிராம விவகார அமைச்சகம் (Ministry of Municipal and Rural Affairs) வலியுறுத்தியுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மால்களுக்குள் வரும் வாடிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி சந்தேகத்திற்கிடமான நபர்களை தனிமைப்படுத்துவதற்கான அறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

உடையை அணிந்து பார்ப்பது, வாசனை திரவியத்தை வாங்குவதற்கு முன் முகர்ந்து பார்ப்பது போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் இல்லாத நேரங்களான ‘காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை’ வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடைக்காரர்கள் ஊரடங்கு நேரத்திலும் டெலிவரி ஆப் (delivery apps) மூலமாக, பார்சல்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை தங்கள் வாகனங்களின் மூலம் நள்ளிரவு வரை விநியோகிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடைகளின் நுழைவு வாயில்களில் வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலையை சோதனையிட வேண்டும். சோதனையின் போது உடல் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸைத் தாண்டும் பட்சத்தில் அவர்களை கடையினுள் நுழைய அனுமதிக்க கூடாது.

வணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வெப்பநிலையை தினமும் பரிசோதனை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி மற்ற நிறுவனங்களிலிருந்து வரும் பணியாளர்களின் உடல் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் அவர்களை நிறுவனத்தினுள் நுழைய அனுமதிக்கக்கூடாது. மேலும்,
தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வேலைக்கு வர அனுமதிக்க கூடாது. அவர்கள் கண்டிப்பாக வீட்டிலிருந்து மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.

அனைத்து வாடிக்கையாளர்களும் முககவசம் அல்லது ஏதேனும் ஒரு வகையில் மூலம் மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

நுழைவாயில்கள், வெளியேறும் பகுதிகள், லிஃப்ட் மற்றும் கழிப்பறைகள் போன்ற நெரிசலான இடங்களில் வாடிக்கையாளர்கள் வரிசையாக செல்லக்கூடிய வகையில் தரை ஸ்டிக்கர்களை பயன்படுத்த வேண்டும்.

கஸ்டமர் சர்வீஸ் சென்டர் போன்ற கூட்டம் அதிகம் நிறைந்த இடங்களில் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் இடையில் சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக தரையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அதே போன்று வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையில் சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக தரை பகுதியில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்

கடையின் மொத்த இட அளவில் ஒன்பது சதுர மீட்டருக்கு ஒரு நபர் என்ற விகிதத்தில் கடையின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழகுசாதனப் பொருட்கள், உடைகள் மற்றும் அலங்காரம் செய்யும் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கு முன் பயன்படுத்தி பார்க்க(trial) அனுமதி இல்லை.

கடைகளின் நுழைவு பகுதிகள், வாடிக்கையாளர் சேவை கவுண்டர்கள் மற்றும் வெளியேறும் பகுதிகள் போன்ற கடையின் கூட்ட நெரிசலான பகுதிகளில், கடைக்காரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையில் 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

சமீபத்திய விதிமுறைகளின்படி, மக்கள் பணத்தைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, EPOS (electronic points of sale), ஆன்லைன் அல்லது மொபைல் அல்லது கார்டு(card) வசதிகள் மூலம் பணம் செலுத்தவும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் அடிக்கடி தொடும் இடங்கள் மற்றும் அனைத்து மேற்பரப்புகளையும் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது, ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு ஷாப்பிங் கார்ட்ஸ் மற்றும் கூடைகளை கிருமி நீக்கம் செய்வதையும் கட்டாயமாக்கவேண்டும்.

ஷாப்பிங் பகுதிகளின் நுழைவாயில்களில் சானிடைசர்கள் இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு பொது கழிப்பறைகள் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் இந்த சூழ்நிலையில் அனைத்து பொது தொடுதிரைகளும்(public touch screens) பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் பொருட்களான பேனாக்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் போன்ற பொதுவான பொருட்களை தனியாக வைக்க வேண்டும்.

இறுதியாக, தொழுகை அறைகள், குழந்தைகள் விளையாடும் இடங்கள் மற்றும் உடை சரி பார்க்கும் அறைகள் போன்றவை மூடப்பட வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

Source: Khaleej Times

Related posts

error: Alert: Content is protected !!