RAIN-Taif

சவூதியின் தாயிஃப் பகுதியில் பெய்த பலத்த மழை – வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட கார்கள்..!

மேற்கு சவூதி அரேபியாவின் தாயிஃப் (Taif) நகரில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கார்கள் மாட்டிக் கொண்டுள்ளதாக ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

இணையதளங்களில் காணக் கிடைக்கும் புகைப்படங்களில் மழையின் காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கும் தெருக்களில் ஏராளமான கார்கள் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன.

நேற்று (வெள்ளிக்கிழமை) பெய்த மழையின் விளைவாக வெள்ளத்தில் சிக்கியுள்ள கார்கள் குறித்த 30 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பதினான்கு கார்களின் உள்ளே மாட்டிக்கொண்டிருந்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெள்ளத்தால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

மழையினால் ஏற்பட்ட நீர்பெருக்கால் சில சாலைகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளது மட்டுமின்றி சில பாதாள சுரங்கங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை காரணமாக பல வாகனங்கள் பழுதும் அடைந்ததால் பிரதான தாயிஃப் சாலையில் போக்குவரத்து முடங்கியதாக இணைய செய்தி நிறுவனமான சப்க் (Sabq) செய்தி வெளியிட்டுள்ளது.

தெருக்களில் மழைநீர் அதிகமாக இருப்பதால் தாயிஃப் மாவட்டத்தின் அல் முண்டாசாவில் (Al Muntazah) உள்ள உள்ளூர்வாசிகள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நிலைமையைக் கையாள்வதற்காக சம்பந்தப்பட்ட அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஒருங்கிணைந்து அவசரகால செயல்பாட்டு அறையை அமைத்துள்ளன.

Related posts