Jeddah Airport

சவூதி சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி ரயில் சேவை தொடக்கம்

ஜித்தாவில் கிங் அப்துல்அஜிஸ்  சர்வதேச விமான நிலைய நிர்வாகம், முனையம் 1 – ல் பயணிகளுக்கான இலவச ரயில் சேவையைத் தொடங்கியுள்ளது.

இந்த உள் தானியங்கி ரயில் சேவையானது, செக்-இன் மண்டலத்திருந்து வரும் மற்றும் புறப்படும் பயணிகளை, பயணர் ஓய்வறைக்குக் கொண்டு செல்லும். இத்தகைய சேவை சவூதி விமான நிலையங்களில் இப்போதுதான் முதல்முறையாக வழங்கப்படுவதாக சவூதி பத்திரிகை முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தானியங்கி கன்வேயர் டிராக்கின் நீளம் 1000 மீட்டர் ஆகும். இது மணிக்கு 4000 பயணிகளைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது. மேலும், இந்த டிராக்கில் இரண்டு நிலையங்கள் மற்றும் 10 வண்டிகள் செல்லத்தக்க இரண்டு தடங்களும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 65 பேர் பயணிக்கத்தக்கவை. இதில் இரண்டு நிலையங்களுக்கு இடையிலான பயண நேரம் 85 நொடிகளாகவும், பயணிகளின் அதிகபட்ச காத்திருப்பு நேரம் 170 நொடிகளாகவும் இருக்கிறது.

கிங் அப்துல் அஜிஸ்  சர்வதேச விமான நிலையத்தின் டைரக்டர் ஜெனரல் இசம் நூர் கூறுகையில், புதிய விமான நிலையத்தால் வழங்கப்படும் தொடர் சேவைகளில் இந்த உள் தானியங்கி ரயில் சேவை ஒரு கூடுதலான குறிப்பிடத்தக்க சேவையாகும். ஏனெனில் இந்த வகை தானியங்கி ரயில்கள் குறிப்பிட்ட சில மேம்பட்ட சர்வதேச விமான நிலையங்களில் மட்டுமே உள்ளன என்று கூறியுள்ளார்.

இந்த உள் தானியங்கி ரயில், சர்வதேசப் பயணிகளை, மண்டலம் A யிலிருந்து, மண்டலம் E யில் உள்ள பயணர் ஓய்வறைகளுக்குக் கொண்டு செல்வதையும், அழைத்து வருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. விமான நிலைய ஓய்வறைகளில் இருப்பதைப் போன்றே இந்த ரயில்களிலும் குளிர்சாதன வசதி, ரேடியோ மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், ஃபயர் அலாரம் அமைப்புகள் போன்ற அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ரயில்கள், நிலையங்கள் மற்றும் தடங்கள் அனைத்திலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அவசரகால வெளியேறும் வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன.

புதிய விமான நிலையம் முதல் கட்டமாக ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகள் வந்து செல்லும் வகையிலும், மூன்றாம் கட்டம் முடிவடைந்ததும் 80 மில்லியன் பயணிகள் வந்து போக எதுவாகவும் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கும் சேவை செய்வதற்காக சுமார் 810,000 சதுர மீட்டர் பரப்பளவில் பயணிகள் ஓய்வறைகள் அமைந்துள்ளன.

இந்த பயணிகள் ஓய்வறைகளில் 220 தளங்கள், பயணிகளுக்காக 80 சுய சேவை சாதனங்கள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இது சர்வதேச விமானங்களுக்கான 25 வாயில்கள், உள்நாட்டுப் பயணங்களுக்கான 13 வாயில்கள் உட்பட மொத்தம் 46 வாயில்களைக் கொண்டுள்ளது. அவற்றில் எட்டு இரட்டைப் பயன்பாட்டு வாயில்களும் அடங்கும். இது தவிர விமானங்களோடு நேரடியாக இணைக்கும் 94 ஏரோபிரிட்ஜ்களும் இங்கு உள்ளன. இது தவிர ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு பாலங்களும், ஜம்போ விமானங்களுக்கென்று மூன்று பாலங்களும் உள்ளன.

Related posts