KAI Airport Saudi

கிங் அப்துல்அஜிஸ் விமான நிலையத்தின் தெற்கு முனையம் மூடப்பட்டது !

சவூதி அரேபியாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான ஜித்தாவில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் விமான நிலையம், தனது தெற்கு முனையத்தை மூடியுள்ளது. 40 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த தெற்கு முனையத்திலிருந்து(Southern Terminal), விமான நிலையம் தனது செயல்பாடுகளை புதிய விமான நிலையத்தின் முதல் முனையத்திற்கு(Terminal I) மாற்றியுள்ளது.

இந்தத் தெற்கு முனையம் சவூதி தேசிய விமான சேவையான SAUDIA வின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சவூதி அரேபியா அயல்நாட்டு விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், அயல்நாட்டு விமானப் போக்குவரத்து எப்போது மீண்டும் தொடங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் சவூதி குடிமக்களை மீட்டு வரும் விமானங்களும், சவூதியிலிருக்கும் வெளிநாட்டவரை அழைத்துச் செல்லும் விமானங்களும் முதல் முனையத்திலிருந்து இயக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“அன்புள்ள பயணிகளே, தெற்கு முனையம் முழுவதுமாக மூடப்பட்டு அனைத்து விமான நிலைய நடவடிக்கைகளும் முதல் முனையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.” என்ற செய்தியை கிங் அப்துல்அஜிஸ் விமானநிலையம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சென்ற வாரத்தில்தான், முதல் முனையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் பயணிகளுக்கான தானியங்கி ரயில் சேவை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts