medina

சவூதியில் விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவச் சென்ற மருத்துவர் கார் மோதி பலி..!

சவூதியின் புனித நகரமான மதீனாவில் நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற மருத்துவர் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

“விபத்துக்குள்ளான மருத்துவர் சவுதி ரெட் கிரசெண்டின் (Saudi Red Crescent) ஒரு மருத்துவக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். அவர் இன்று (ஞாயிறு) விடியற்காலை மதீனாவின் ஒரு சாலையில் வாகனம் கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக விரைந்து சென்றுள்ளார்.” என்று ரெட் கிரசெண்ட் சேவைகளின் செய்தித் தொடர்பாளர் கலீத் அல் செஹ்லி ( Khaled Al Sehli) தெரிவித்துள்ளார்

மேலும், “அவர் விபத்துக்குள்ளானபோது, ​​ஒரு சக ஊழியர் ஓடிவந்து ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.” என்றும் அல் செஹ்லி கூறியுள்ளதாக, சவூதி இணைய நாளிதழான சப்க் (Sabq) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அந்த மருத்துவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

“மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காகப் பெரும் தியாகங்களைச் செய்யும் மிகச் சிறந்த மருத்துவர்களில் அவர் ஒருவர்.” என்று அல் செஹ்லி கூறினார்.

சாலை விபத்து நேர்ந்த இடங்களில் உள்ள எச்சரிக்கை விளக்குகளை கவனிப்பதில் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்குமாறு வாகன ஓட்டிகளை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் ரெட் கிரசெண்ட் கம்மிட்டியின் (Friends of the Red Crescent Committee) தரவுகளின்படி சவூதி அரேபியாவில் ஆண்டு ஒன்றுக்கு 526,000 சாலை விபத்துகள் பதிவாகின்றன. இந்த விபத்துகளில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 17 ஆக இருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், 2025 ஆம் ஆண்டளவில் சவூதி நகரங்களை சாலை விபத்தில்லாதவையாக மாற்றுவதற்கான முன்னெடுப்பை சவூதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Related posts