sun
Image Credits- Riyadh Xpress

சவூதியில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் வேலை செய்ய தடை..!

மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் அமைச்சரவை தீர்மான எண் 3337 (7/15/1435 AH) இன் படி, 23 ஷவ்வால் 1441 AH (ஜூன் 15, 2020 ) முதல் முஹரம் 1442 AH (செப்டம்பர் 15, 2020) வரை தனியார் துறையில் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கும், தொழிலாளர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவதற்கும், அவர்களின் சுகாதார ஆபத்துகளுக்கு வழிவகுக்கும் காரணங்களைத் தவிர்ப்பதற்காகவும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொழிலாளர்கள் வெயிலில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொழில்சார் சுகாதாரம் மற்றும் அமைச்சரவை தீர்மானத்தின் கூற்றுப்படி , “சூரிய வெயிலின் கீழ் ஒரு தொழிலாளியை திறந்த வெளியில் பணியில் ஈடுபடுத்த அனுமதிக்ககூடாது. மேலும் கிரிகோரியன் ஆண்டின் (Gregorian year) ஒவ்வொரு ஜூன் பதினைந்தாம் தேதி முதல் செப்டம்பர் பதினைந்தாம் தேதி வரையிலான காலகட்டத்தில் மதியம் பன்னிரண்டு முதல் மாலை மூன்று மணி வரை தொழிலாளர்கள் வெயிலில் வேலை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தடையானது எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் , அவசரகால பராமரிப்புத் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இவ்வகை தொழிலாளர்களின் நலன் கருதி சூரிய ஒளி தாக்கத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், வேலை நேரத்தை ஒழுங்கமைக்கவும், இந்த தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளை கவனிக்கவும் அமைச்சகம் முதலாளிகளிடம் அறிவுறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி தொழிலாளர்களை பல்வேறு பணி ஆபத்துகளிலிருந்து தப்புவிக்கவும், தொழில்ரீதியான காயங்கள் மற்றும் நோய்களைக் குறைப்பதற்கும், தொழிலாளர்களை விபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை வழங்கவும் அமைச்சகம் கடுமையான முயற்சிகள் செய்து வருவதோடு, செயல்திறன் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை மேலும் உயர்த்துவதன் மூலம் உற்பத்தியின் அளவு கனிசமாக அதிகரிக்கும்.

அதேசமயம், இந்த தீர்மானத்தின் முடிவானது நாட்டில் சில பகுதிகளில் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சில பகுதிகளில் வெப்பநிலை குறைந்து காணப்படுவதால், குறிப்பிடப்படும் மணிநேரங்களில் மட்டும் வேலை செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் நிலவும் காலநிலை மாற்றங்கள் மற்றும் வெப்ப நிலைகளுக்கேற்ப மேலாளர்கள் வேலை செய்யும் நேரத்தை திட்டமிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் அமல்படுத்துவது தொடர்பான விசாரணைகள், விதிமீறல்கள் மற்றும் புகார்களைப் பதிவுசெய்ய, வாடிக்கையாளர் சேவை தொலைபேசி எண்ணை (19911) தொடர்பு கொள்ளலாம் அல்லது மான்(Ma’an) கண்காணிப்பு போர்டல் https://rasd.ma3an.gov.sa மூலமும் புகார்களை பதிவுசெய்யலாம்.

Related posts