riyadh
Image Credits- Saudi Gazette

பசுமையை நோக்கி நகரும் ரியாத்..! ஒரு கண்ணோட்டம்..!

ரியாத்தின் மேயரும், இளவரசருமான பைசல் பின் அப்துல் அஜீஸ் பின் அய்யஃப் அவர்கள் ‘கிங்டம்ஸ் விஷன் 2030’ மற்றும் தேசிய உருமாற்ற திட்டங்களின் குறிக்கோளிற்கு ஏற்ப ரியாத் நகரத்தின் பசுமையான பகுதிகளை அதிகரிப்பதற்காக வணிக மையங்கள் மற்றும் காம்பவுன்ட்களில் (compounds) உள்ள பார்க்கிங் பகுதிகளில் மரங்களை நடுவதற்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் வாகன பார்க்கிங் பகுதிகளில் மரங்களை நடுவதற்கான புதிய ஒழுங்கு முறைகள் இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்படும் என்று ரியாத் மேயர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து “குறைந்தபட்ச தண்ணீரில் மிக அடர்த்தியாக வளரக்கூடிய மற்றும் ரியாத்தின் கால நிலைகளுக்கு ஏற்ற மரங்களை நடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ரியாத் வாசிகளுக்கு வழங்கப்படும் வாழ்க்கைத் தரம் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் தனியார் துறை முக்கிய பங்காற்றுகிறது என்பதையும் மேயர் சுட்டிக்காட்டினார்.

வரவிருக்கும் ஆண்டுகளில் 7.5 மில்லியன் மரங்களை நடுவதன் மூலம் ரியாத் முழுவதும் பசுமையாக்கப்படுவது மட்டுமில்லாமல், உலகின் முதல் 100 நகரங்களில் ரியாத் இடம்பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் நான்கு பெரிய திட்டங்களின் ஒரு பகுதியாக, “கிரீன் ரியாத்” என்னும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டமானது பசுமைக்கான தனிநபர் பங்களிப்பை அதிகரிக்க உதவுவதோடு, நகரத்தை சுற்றி மரங்களை நடுவதன் மூலம் பசுமையான இடங்களின் மொத்த அளவை அதிகரிக்க முடியும்.

கிரீன் ரியாத்தின் இந்த முயற்சியானது நகரத்தின் காற்றின் தரம் மற்றும் வெப்பநிலையைக் குறைக்க வழிவகுக்கும். மேலும் ரியாத் குடியிருப்பாளர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பெறுவதற்கு ஏற்றதாக அமையும்.

இதைபோல் சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை அமைச்சகத்தின் மரம் நடும் திட்டத்துடன், கடந்த அக்டோபரில் ஒரு தேசிய காடு வளர்ப்பு திட்டமும் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ரியாத்தில் உள்ள தாடிக் தேசிய பொழுதுபோக்கு பூங்காவில் 50,000 மரங்கள் நடப்பட்டது. இதில் குடிமக்கள், வெளிநாட்டவர்கள், பார்வையாளர்கள், பள்ளிகள், பொது மற்றும் தனியார் துறைகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Source: Saudi Gazette

Related posts