prisoners manufacturing masks

சவூதி சிறையில் முகக்கவசம் தயாரிக்கும் கைதிகள் !

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான போராட்டம் நிகழ்ந்து வருவதைத் தொடர்ந்து, சவூதியில் சிறைக் கைதிகளுக்கு பாதுகாப்பு முகக்கவசங்களைத் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

கைதிகளுக்குப் பயிற்சி 

சவூதி கிழக்கு பிராந்தியத்தில் இருக்கும் தமாம் சிறை நிர்வாகம், ஒரு தனியார் வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து, ஆடை தயாரிப்பில் பட்டம் பெற்றிருக்கும் சிறைவாசிகளுக்கு, தன்னார்வ சமூக சேவையாக முகக்கவசங்கள் தயாரிப்பதற்கான பயிற்சியை வழங்கியிருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினசரி 750 முகக்கவசங்கள்

“முகக்கவசங்கள் தயாரிப்பதற்கான துணிகள் வந்தடைந்து விட்டன. தையல்காரர்கள் தொழில்முறையில் வேலையைக் கற்றுக் கொண்ட பின்னர் சிறையிலிருந்து தினசரி 500 முகக்கவசங்கள் தயாரிக்கப்படும்” என தமாம் சிறைச்சாலையின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் சவுத் அல் கஹ்தானி கூறியுள்ளதாக Okaz newspaper செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தமாம் பெண்கள் சிறையின் தயாரிப்பையும் இணைத்துக் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை 750 ஐத் தொடும் எனவும் அவர் அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் 

சவூதி அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிவதைக் கட்டாயமாக்கி இருக்கிறது.

சவூதியில் பல மாதங்களாகத் தொடர்ந்து வந்த முழு ஊரடங்கு நீக்கப்பட்டு சென்ற வாரத் தொடக்கத்தில்தான் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சர்வதேச விமானப் பயணம், உம்ரா பயணங்கள் ஆகியவற்றிற்கான தடை நீடிப்பதோடு, பொது இடங்களில் 50 நபர்களுக்கு மேல் கூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

Related posts