Rare Operation for Child in Saudi
Image Courtesy : Agency

சவூதியில் பேட்டரியை விழுங்கிய குழந்தைக்கு நடந்த அரிய அறுவை சிகிச்சை

சவூதியில் பேட்டரியை விழுங்கிய இரண்டு வயதுக் குழந்தைக்கு அரிதான ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், பேட்டரி 16 மணி நேரமாக குழந்தையின் உணவுக் குழாயில் சிக்கியிருந்தது என சவூதி இணைய நாளிதழான Sabq செய்தி வெளியிட்டுள்ளது.

புனித நகரமான மதீனாவில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் உள்ளூர் இதய நல மையத்தின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன.

குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் ஹீமோகுளோபின் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் உணவுக்குழாய் மற்றும் பெருந்தமனி ஆகியவற்றிற்கு இடையே ஒரு துளை இருப்பது CT ஸ்கேன் மூலம் தெரியவந்துள்ளது. குழந்தை விழுங்கிய சிறிய வட்ட வடிவிலான பேட்டரி உணவுக்குழாயில் சிக்கியதால் இந்த அரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது எனக் கண்டறிந்த பின்னர் அந்த பேட்டரி என்டோஸ்கோபி சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து 5 நாட்களுக்குப் பிறகு குழந்தையின் உடல்நலம் நிலையான பின்பு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், 10 நாட்களுக்குப் பிறகு, பேட்டரியின் மின்னணு மற்றும் வேதித்தன்மை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவர் குழுவினர் அக்குழந்தையை மதினாவில் உள்ள இதயநல மையத்திற்கு சிகிச்சைக்குச் செல்லப் பரிந்துரைத்தனர். அங்கு நடைபெற்ற இதய வடிகுழாய் சிகிச்சையினால் இரத்தப்போக்கு நிறுத்தப்பட்டு குழந்தை குணமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Related posts