theathre
image credits: english.mubasher.info

சவூதியில் திரையரங்கங்கள் மீண்டும் இயங்க அனுமதி – கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் அறிவிப்பு

சவூதியில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி திரையரங்கங்கள் மீண்டும் செயல்படலாம் என ஜெனரல் கமிஷன் ஆஃப் ஆடியோ விசுவல் மீடியா (GCAM) அறிவித்துள்ளது.

இதற்காக சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து சினிமா ஆபரேட்டர்களும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை ஆணையம் வெளியிட்டுள்ளது. அவற்றைக் கீழே காணலாம்.

  • அனைத்துத் திரையரங்கங்களும் நுழைவு வாயில்கள், டிக்கெட் வழங்கும் இடங்கள், கேன்டீன்கள், கழிவறைகள் என அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வலியுறுத்தும் அடையாள ஸ்டிக்கர்களை 1.5 முதல் 2 மீட்டர் இடைவெளியில் ஒட்ட வேண்டும்.
  • சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் பொருட்டு இரு பார்வையாளர்களுக்கு இடையில் குறைந்தது இரண்டு இருக்கைகள் காலியாக இருக்கும்படி இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் இரண்டு மீட்டர்கள் இடைவெளி இருக்கும்பட்சத்தில் ஒரே குடும்பத்தினர் ஒன்றாக அமர அனுமதிக்கலாம்.
  • பார்வையாளர்கள் டிக்கெட்டுகளை இணையதளம் அல்லது பிரத்தியேக அப்ளிகேஷன்கள் வழியாக மட்டுமே வாங்க வேண்டும்.
  • கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு சுலபமாக வந்து செல்லும்படி நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் அமைக்கப்பட வேண்டும்.
  • அனைத்துப் பார்வையாளர்களும் எளிதில் அணுகும்படி சானிடைசர் போன்ற சுகாதார உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.
  • ஏதேனும் உபகரணங்கள் மூலமாகவோ அல்லது அச்சடிக்கப்பட்டோ டிக்கெட்கள் விநியோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • திறந்த வெளித் திரையரங்களுக்கும் இதே விதிமுறைகள் பொருந்தும்.

திரையரங்க ஊழியர்களுக்கான விதிமுறைகளில், பார்வையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதைத் தவிர்த்தல், கட்டாயமாக முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் அணிந்திருத்தல், டிக்கெட் விநியோகிக்கும் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் இடங்களில் உள்ள பணியாளர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வலியுறுத்தல் மற்றும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களைத் தடுத்து நிறுத்த அறிவுறுத்தல் ஆகியவை அடங்கும்.

பணியாளர்களில் யாருக்காவது நோய்த்தொற்று இருப்பது உறுதியானால் அவர்களைத் தனிமைப்படுத்துவதோடு, கொரோனா வைரஸ் வேறு யாருக்கும் பரவாமல் இருக்க திரையரங்கம் உடனடியாக மூடப்பட்டு, சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்த பிறகு வளாகம் நன்கு காற்றோட்டமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

திரையிடலுக்கு முன்னதான விளம்பர நேரத்தை, மக்களுக்கு நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு மற்றும் கூட்டம் கூடாமல் பாதுகாப்பான முறையில் உள்நுழைவது மற்றும் வெளியேறுவது குறித்த அறிவிப்புகளுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும், டிக்கெட்டுகளுக்குப் பின்புறம் விழிப்புணர்வு அறிவிப்புகள் இடம் பெற வேண்டுமென்றும், விதிமீறல்கள் குறித்துப் புகாரளிப்பதற்கான வழிமுறைகள் வளாகமெங்கும் பல்வேறு மொழிகளில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts