mecca
image credits: Gulf News

இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு அனுமதி – சவூதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு வாய்ப்பு!

இஸ்லாம் மதத்தின் ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ். இது பொருளாதார மற்றும் உடல் வலிமை கொண்ட அனைத்து இஸ்லாமியர்களுக்கும் கடமை.

இந்த ஹஜ் புனித யாத்திரை செய்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் சவுதிக்கு வருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு சவூதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு மட்டும் ஹஜ் புனித யாத்திரை செய்ய சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், கூடுதலான சுகாதார சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு குறைந்த அளவிலான யாத்ரீகர்களை மட்டுமே அனுமதிக்க இருப்பதாகவும், வயதானவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரை உலகின் மிகப்பெரிய மதக் கூடுகைகளில் ஒன்றாகும். வருடந்தோறும் சுமார் 2.5 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் மக்கா மற்றும் மதீனாவில் உள்ள இஸ்லாத்தின் புனிதத் தலங்களை தரிசிப்பதற்காக ஒரு வாரப் பயணமாக ஹஜ்ஜிற்கு வருகை தருகின்றனர்.

சவூதி அரேபியா கடந்த மார்ச் மாதத்தில் இஸ்லாமியர்களிடம் தங்கள் ஹஜ் பயணத் திட்டத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது. மேலும் உம்ராவிற்கும் மறு அறிவிப்பு வரும் வரையில் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts