கொரோனா காரணமாக சவூதி அரேபியாவில் கடந்த மார்ச் 15 ஆம் தேதிமுதல் சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. மீண்டும் எப்போது விமானப் போக்குவரத்து துவங்கப்படும் என சவூதி குடியிருப்பாளர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் அதுகுறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்திருக்கிறது.
சவூதியின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் (Salman Bin Abdul Aziz) மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed Bin Salman) ஆகியோரின் ஒப்புதல் கிடைத்தபிறகு மீண்டும் சர்வதேச விமான சேவைகள் வழக்கம்போல துவங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் தவ்ஃபிக் அல் ராபியா (Tawfiq Al Rabiah),” சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளை மீண்டும் துவங்குவது என்பது கொரோனா நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டது” என்றார்.
எப்போது மீண்டும் சர்வதேச விமான சேவைகள் துவங்கப்படும் என ராபியாவிடம் கேட்கப்பட்ட போது,” கொரோனா தாக்கம் இருக்கும் வரையிலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது கட்டாயமாகிறது. ஒவ்வொரு பயணியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதும் எங்களது கடமையாகும்” என்றார்.
சமீபத்தில் சவூதியிலிருந்து 25 நாடுகளுக்குப் பயணிக்கத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் வெளியிட்டது. அதேபோல, சவூதியில் விமானப் போக்குவரத்திற்கான தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு வெளிநாடுகளில் இருந்து சவூதி திரும்புவோருக்கான 7 பயண விதிமுறைகளும் வெளியிடப்பட்டன. பயணிகள் அனைவரும் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை கவனமாகப் பின்பற்றவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.