saudi pharmacy sector

இனி சவூதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மருந்தாளுநர் பணி – அமலுக்கு வந்தது புதிய திட்டம்..!

சவூதி அரேபியாவில் வெளிநாட்டைச் சேர்ந்த மருந்தாளுநர்களுக்கு பதிலாக சவூதி மக்களைப் பணியமர்த்தும் திட்டத்தின் முதல் கட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முடிவின்படி, இன்று (புதன் கிழமை) முதல் இருபது சதவீதப் பணியிடங்கள் சவூதி மக்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று சவூதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவூதியின் ஷூரா ஆலோசனை கவுன்சில் கடந்த மாதம், நாட்டின் மிகப்பெரிய வணிக நடவடிக்கைகளில் ஒன்றான மருந்தியல் துறையில் ‘சவூதியைச் சேர்ந்தவர்களை மட்டும்’ பணியில் அமர்த்துவதற்கான திட்டத்திற்கு வாக்களித்தது. இந்தத் துறையில் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துவதாக சவூதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்ட அறிக்கை, மருந்தியல் பயின்ற சவூதியைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, மருந்தகங்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தவும், சவூதியைச் சேர்ந்தவர்களை மருந்தகங்களில் பணியமர்த்தவும் கோருகிறது. உள்ளூர் பணியாளர் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான மருந்தாளுநர்கள் சவூதியிலேயே இருப்பதாக இந்த திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, வெளிநாட்டைச் சேர்ந்த 21,530 பேர் சவூதியில் மருந்தாளுநர்களாகப் பதிவு செய்துள்ளனர். சவூதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகையான 34.8 மில்லியனில் 10.5 மில்லியன் பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்கது.

Related posts