சவூதி அரேபியா வரும் நாளை காலை முதல் ஊரடங்கை முழுவதுமாகத் தளர்த்த இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அவசரத் தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்களை வெளியே செல்ல அனுமதித்திருந்த மக்கா மற்றும் ஜித்தா போன்ற நகரங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்ப இருக்கிறது.
ஆண்களுக்கான முடி திருத்தகங்கள் மற்றும் பெண்களுக்கான அழகு நிலையங்கள் என அனைத்தும் நாளை முதல் மீண்டும் இயங்கலாம் என நகராட்சி மற்றும் கிராமப்புற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இயல்பு நிலை திரும்புவது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் :
- தீவிரமான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி அனைத்து விதமான பொருளாதார, வணிக நடவடிக்கைகளையும் மீண்டும் தொடரலாம்.
- உம்ரா யாத்திரை மற்றும் வெளிநாட்டு விமானத் தொடர்புகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரையில் அனுமதி இல்லை. அதே போல, நாட்டின் நில மற்றும் கடல் எல்லைகளும் மூடப்பட்ட நிலையிலேயே நீடிக்கும்.
- நாட்டின் குடிமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக Tabaud மற்றும் Tawakkalna அப்ப்ளிகேஷன்களைத் தரவிறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- பொது மக்கள் அனைவரும் கண்டிப்பாக சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.
- 50 நபர்களுக்கு மேல் கூடுவதற்குத் தடை.
- பொது இடங்களுக்குச் செல்லும் போது அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறும் நபர்கள் தண்டனைக்கு உள்ளாவர்கள் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது