saudi health ministry

சவூதியில் ஒரு நபர் மூலம் 18 பேருக்குப் பரவிய கொரோனா

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்குத் திரும்பிய சவூதி குடிமகன் ஒருவர் மூலமாக அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தின் மற்ற 16 உறுப்பினர்களுக்கும் நோய்த்தொற்று பரவியுள்ளதாக சவூதி சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபரின் தந்தை உயிரிழப்பு 

வேறு ஒரு நகரத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய அந்த அடையாளம் தெரியாத நபர், கை குலுக்குதலைத் தவிர்ப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிக்கத் தவறியதன் காரணமாகவே கொரோனா பரவியுள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சவூதி பத்திரிகை முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபரின் தந்தை covid-19 தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஏற்கனவே இதய நோய் உடையவர் ஆவார். இதைப் பற்றி மேலதிக விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

வயதானோருடன் கை குலுக்க வேண்டாம் 

சவூதியில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதைத் தொடர்ந்து, சமீப வாரங்களாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை சுகாதார அமைச்சகம் முடுக்கி விட்டுள்ளது.

அதனொரு பகுதியாக, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக சுலபமாக பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், வயது முதிர்ந்த நபர்களிடம் கை குலுக்குவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts