இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜீஸ் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என சவூதியின் மூன்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 84 வயதான மன்னர் நேற்று (திங்கள்) பித்தப்பை வீக்கம் காரணமாக ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், தங்கள் அடையாளங்களை வெளியிட விரும்பாத சவூதியின் மூன்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் ஒருவர் நேற்றைய பின் பொழுதிலும், மற்றொருவர் செவ்வாய்க்கிழமையான இன்றும் மன்னர் நலமுடன் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.
அடையாளத்தை வெளியிட விரும்பாத பிராந்திய அதிகாரி ஒருவர், திங்களன்று அமைதியாகக் காணப்பட்ட சல்மான் மன்னரின் மகன்களில் ஒருவரிடம் பேசியதாகவும், மன்னரின் உடல்நிலை குறித்து எந்தவிதமான பீதியும் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் தலைவர்களிடமிருந்து திங்கள்கிழமை சல்மான் மன்னருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்ததாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.