girl
Image Credits- Arab News

கொரோனாவால் உயிரிழந்த சவூதி செவிலியர் மகளின் கடைசி நேர நெஞ்சை உருக்கும் நிகழ்வு..!

சவூதியில் உள்ள அல்-அஹ்சாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் சிகிச்சை மையத்தில் தன்னார்வத் தொண்டு செய்த சவூதி செவிலியரான ராதியா அல்-ஹமூத் மூலம் கொரோனா வைரஸ் அவரது குடும்பம் முழுவதும் பரவியுள்ளது. அதுமட்டுமின்றி அவரது 13 வயது மகள் மசூமா இந்த நோயால் உயிரிழந்தது மேலும் அக்குடும்பத்தை நீங்கா பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

இச்சிறுமியின் தாய் இறப்புடன் போராடிக்கொண்டிருந்த தனது மகளின் கடைசி தருணங்களில் மிகுந்த மன வருத்தத்துடன் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார். அப்போது அச்சிறுமி தனது தாயை நோக்கி “நான் உங்களை மன்னிக்கிறேன் அம்மா” என்று கூறி தனது இன்னுயிர் துறந்தார்.

இது குறித்து சிறுமியின் தாய்(செவிலியர்) கூறும்போது, “நான் அவளிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன், ஏனென்றால் அவளின் இந்த நோய்க்கு காரணம் நான் தான்” என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, “எங்கள் இருவருக்கும் இடையிலான உறவு மிகவும் வலிமையானது, எனது மகள் மசூமா அதிக இரக்க குணம் கொண்டவள். நான் வேலை முடிந்து வீடு திரும்பும் ஒவ்வொரு நாளும் அவள் என்னை கட்டி அனைத்து சோர்வாக இருக்கும் எனது கால்களுக்கு ஆறுதலாக மசாஜ் செய்வாள்” என்று கூறினார்.

“மசூமா கள்ளங்கபடமற்ற ஒரு தேவதை. அவள் எங்களது குடும்பத்தின் பட்டாம் பூச்சி. அவளது ஆத்மா இரக்கம் மற்றும் அளப்பறிய அன்பின் ஒளியால் நிறைந்திருந்தது. அவள் எங்களிடமிருந்து விடைபெறும் அந்த கடைசி நிமிடங்களில் எங்கள் மனம் சொல்ல முடியாத வேதனையால் நிறைந்திருந்தது” என்று சிறுமியின் தாய் கூறினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் எனது மகளின் உடலில் அனைத்து முக்கிய செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான வலியை அவள் அனுபவித்தபோதிலும் என்னிடம் அம்மா ஓய்வெடுங்கள் சற்று தூங்குங்கள் என்று கூறியதை நினைவு கூர்ந்து மனம் வருந்தினார்.

மேலும், அன்புக்குரியவர்களிடம் இருந்து விடைபெறும் தருணம் நமது உயிர் பிரிவதற்கு நிகரானது என்று அல்-ஹமூத் கூறினார்.

இதுகுறித்து மசூமாவின் தந்தை ஹபீப் அல் பிலாடி கூறும்போது, தனது மகள் தனது நாட்டிற்காக உயிர் துறந்தாள் என்று கூறினார். கடந்த மார்ச் மாத நடுவில் வீட்டு தனிமைப்படுத்தல் தொடங்கியபோது, ​​அல்-அஹ்சாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் மையங்களில் விருப்பத்துடன் தன்னார்வத் தொண்டு பணி செய்தவர்களில் தனது மனைவி அல்-ஹமூத்தும் ஒருவர். அச்சமயத்தில் தான் மே 12 ஆம் தேதி, அல்-ஹமூத்து கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டார் என்று பிலாடி கூறினார்.

அதன் காரணமாக மசூமா மற்றும் எனது இரு மகன்களான மஹ்மூத் மற்றும் முகமது உட்பட எங்களது முழு குடும்பமும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம். அப்போது எங்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே நாங்கள் அல்-அஹ்சாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டோம், ஈத் அல்-பித்ரில் எங்கள் உடல்நிலை குணமடைந்தது. அச்சமயத்தில் சவூதியின் அனைத்து நகரங்களிலும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது,” என்று அவர் கூறினார்.

எனது மகளின் உடல் வெப்பநிலை சில நாட்களுக்குப் பிறகு அதிகரித்தது. அவளை பல கிளினிக்குகளுக்கு அழைத்துச் சென்றோம், அங்கு அவளுக்கு ஆண்டிபிரைடிக்ஸ் (antipyretics) வழங்கப்பட்டது, ஆனால் அவளது காய்ச்சல் இரண்டு நாட்கள் நீடித்தது என்று சிறுமியின் தந்தை கூறினார்.

“உடனே நாங்கள் அவளை குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், அவள் உடல்நிலை மிகவும் நிலையாக இருந்த காரணத்தினால் நாங்கள் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லவிருந்தோம், ஆனால் மருத்துவமனை அவளது உடல்நிலையை கண்காணிக்க விரும்பியது. இதையடுத்து அவளுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது. அவளது உடலின் முக்கிய செயல்பாடுகளில் பிரச்சனை ஏற்பட்டதால் உடனடியாக அவள் வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜூன் 15 ஆம் தேதியன்று தனது மகள் இறுதி மூச்சை விட்டாள்” என்று அவரது தந்தை கூறினார்.

தனது நாட்டிற்கு சேவை செய்வதற்கும், நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் மையத்தில் தன்னார்வத் தொண்டு பணியினை செய்வதற்கான செவிலியரின் இந்த முடிவை செவிலியரின் முழு குடும்பமும் ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source: Arab News

Related posts