Corona Death In Saudi

சவூதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் – சகோதரர் பகிர்ந்த உருக்கமான தகவல்கள்

Covid-19 ஆல் பாதிக்கப்பட்டு மரணமடைந்த குழந்தை நல மருத்துவர், ஈத் அல் பித்ர் விடுமுறை காலத்தில் பணியில் இருந்தபோது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் அகமது புவாலி, அவர் பணிபுரிந்த மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுடன் பழகியதால் அவரும் பாதிப்புக்குள்ளானதாக சவூதி தொலைக்காட்சி நிறுவனமான Al Ekhbariya விற்கு அவரின் சகோதரர் அடெல் தெரிவித்துள்ளார்.

“ஈத் விடுமுறைக்கு பின்புதான் அவருக்கு அறிகுறிகள் தென்படத் தொடங்கின. அறிகுறிகள் தீவிரமடையத் தொடங்கும் வரையில், தான் வைரஸால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. பின்னர் மருத்துவமனையில் சோதித்தபோது அவருக்கு கொரோனா தாக்கியிருப்பது உறுதியானது.” என அடெல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், “ஆபத்தான நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பது தெரிந்தும் மருத்துவர் அகமது பொறுமையாகவும் உறுதியாகவும் இருந்தார். அவர் எப்போதும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இருந்தார். புன்னகைப்பதை ஒருபோதும் அவர் நிறுத்தவில்லை. அவரது ட்வீட்கள் நேர்மறைத்தன்மையுடனேயே இருக்கும்.” என்று அடெல் தெரிவித்துள்ளார்.

மறைந்த மருத்துவர் குழந்தைகளுக்கான நரம்பியல் நிபுணர் ஆவார். ” சிகிச்சைக்காக வரும் குழந்தைகளைத் தன் சொந்தக் குழந்தைகள் போலவே பாவிப்பார். பணியில் இல்லாத நேரத்திலும் பெற்றோரை அழைத்து குழந்தைகளின் உடல்நலம் குறித்து விசாரிப்பார். ஏனெனில், மருத்துவம் என்பது ஒரு தொழில் என்பதை விட அது ஒரு மனிதாபிமானமிக்க பணி என்பதை அவர் நம்பினார்.” என அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

சவூதியில் தொற்றுநோய்க்கு எதிராக முன் வரிசையில் போராடி உயிரிழந்த பல மருத்துவ நிபுணர்களில் மருத்துவர் அகமதுவும் ஒருவர் ஆவார்.

Related posts