collision in Saudi Arabia
Image Credit : Supplied

சவூதியில் சாலை விபத்து : ஆசியாவைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உட்பட 9 பேர் பலி

சவூதி வடமேற்கு நகரமான ஹெயில் அருகே இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக சவூதி இணைய நாளிதழான Sabq செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களில் ஒன்றில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட  சவூதி குடும்பம் ஒன்றும், இரண்டாவது வாகனத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர்கள் நான்கு பேரும் பயணித்துள்ளனர்.

அல் ஹைட் கவர்னரேட் சாலையில் இரண்டு வாகனங்களும் மோதிக் கொண்டதில், வாகனங்களில் நெருப்புப் பற்றி பயணிகள் அனைவரும் உயிரிழந்ததாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் போக்குவரத்துக் காவல்துறையினர் மற்றும் மருத்துவ சேவை செய்வோர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை அல் ஹைட்டின் மருத்துவமனையில் உள்ள பிணவறைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

சவூதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் 17 வயது மகன் மட்டுமே, விபத்து நடந்த நேரத்தில் ஹெயிலில் உள்ள அவர்களது வீட்டில் இருந்ததால் உயிர் தப்பியுள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அறிக்கைகளின்படி, உயிரிழந்த குடும்பத் தலைவர் ஒரு காவல் துறை அதிகாரி எனவும் அடுத்த வாரத்தில் அவர் விருப்ப ஓய்வு பெறத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிகிறது. அவருக்கு அவரின் சக பணியாளர்கள் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

சமீப ஆண்டுகளில், சவூதி அதிகாரிகள் சாலை விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதங்களை அதிகப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts