tabaud
Image Credits- Saudi Gazette

சவூதியில் கொரோனா பரவலை கண்டறியும் தபௌத் அப்ளிகேஷன்..!

சவூதி அரேபியா கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான புதிய முயற்சியாக ஸ்மார்ட்போன்களுக்கான தபௌத் என்ற அப்ளிக்கேஷன் (Tabaud application) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனை ஆப்பிள் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் தரவிரக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இந்த அப்ளிகேஷனை சவூதி தரவு மற்றும் செயற்கை புலனாய்வு ஆணையத்தின் (SDAIA) தேசிய தகவல் மையம் (National Information Center- NIC) உருவாக்கியுள்ளது. சவூதியின் சுகாதார அமைச்சகத்தின் (MoH) ஒத்துழைப்புடன் அதிகாரப்பூர்வ தொடர்பு தடமறிதல் அப்ளிகேஷனாக (contact tracing application) இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அப்ளிகேஷன் பயன்பாட்டாளர்களுக்கு மூன்று முக்கிய சேவைகளை வழங்குகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட நபருடன் மற்றொருவர் தொடர்பு கொண்டிருக்கும் போது, அவரும் இந்த அப்ளிகேசனை பயன்படுத்தும் பட்சத்தில் இருவருக்கும் இடையில் தரவுகள் பரிமாற்றம் செய்யப்படும். இவ்வாறு பரிமாற்றம் செய்யப்படும் தரவுகள் நேரடியாக சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு நோயாளியின் நிலை மற்றும் நோயின் தீவிரமறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வைரஸ் உறுதி செய்யப்பட்ட எந்தவொரு நபரும் சுகாதார அமைச்சகத்திடம் நேரடியாக மருத்துவ உதவியை கோரும் நோக்கத்திற்காகவும் இந்த அப்ளிகேசன் பயன்படுகிறது.

இந்த அப்ளிகேசனின் பண்புகள் மற்றும் செயல்பாடுகள் (characteristics and functions) சவூதி அதிகாரிகள் வழங்கும் கூடுதல் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டதாக இருக்கும். அதாவது கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும், சமூக மற்றும் பிற கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்கும் சவூதி அதிகாரிகளால் இந்த அப்ளிகேஷனில் புதிதாக ஏதேனும் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபௌத் அப்ளிகேஷன் மிகவும் பாதுகாப்பானதாகும் (user privacy). இந்த அப்ளிகேஷன் இயங்குவதற்கு எந்த தகவலும் அல்லது இருப்பிட பகிர்வும் (location sharing) தேவையில்லை, ஏனெனில் இது புளூடூத் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான மருத்துவ நடைமுறையை பயனாளிகள் தொடங்க விரும்பினால் அவரின் பெயர், தேசிய அல்லது குடியிருப்பு அடையாள எண் (National or Residence ID number) மற்றும் பிறந்த தேதி போன்ற தகவல்களை சுகாதார அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும்.

Related posts