Inspection Tours
Image Courtesy : Saudi Gazette

சவூதியில் விலைவாசிகளை ஆய்வு செய்ய குழுக்களை அமைத்தது அமைச்சகம்

சவூதியில் விலைவாசிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா என்பதை அறியவும், நுகர்வோரிடம் இருந்து அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவும் சவூதி வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சகத்தின் குழுக்கள் நாடு முழுவதும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

மொத்த மற்றும் சில்லறை வணிக நிறுவனங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் இந்த அணிகள் உறுதி செய்ய இருக்கின்றன.

இந்த ஆய்வுக் குழுக்கள், பொருட்களின் விலையை மின்னணு விலைக் கண்காணிப்பு அமைப்பின் மூலம் கண்காணித்து அவற்றை அண்டை நாடுகளின் விலைவாசியோடு ஒப்பிடுகின்றன. மேலும், நியாயமற்ற முறையில் விலைகளை அதிகரித்திருப்பது தெரிய வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கவும் ஆய்வுக் குழுக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக சவூதி பத்திரிகை முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இது குறித்த புகார்களை நுகர்வோர் எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யும் வழிமுறைகளை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி https://mci.gov.sa/C-app இந்த லிங்கின் மூலமாகவோ, 1900 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்தோ அல்லது அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கங்களிலோ நுகர்வோர் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்.

கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் சவூதி முழுவதும் வணிக நடவடிக்கைகள் மீண்டும் நேற்று தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts