teenager arrest

சிறுமிகளைத் தவறான கோணத்தில் படமெடுத்த இளைஞர் – சவூதியில் இரு வேறு சம்பவங்களில் இளைஞர்கள் கைது

வயது வராத சிறுமிகளை வசப்படுத்தி அநாகரிகமான கோணங்களில் படமெடுத்த அரபு இளைஞர் ஒருவரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அந்தப் படங்களைக் காட்டி சம்பந்தப்பட்ட சிறுமியரை மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்ட அந்த இளைஞர், தனது இத்தகைய நடவடிக்கைகளைப் பற்றி சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கைது செய்து காவலில் வைத்ததோடு, அவருக்கு எதிராக வழக்குப் பதியப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த இருப்பதாகவும் மக்கா பிராந்தியத்தைச் சேர்ந்த காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் முஹம்மது அல்-காம்டி (Maj. Muhammad Al-Ghamdi) தெரிவித்துள்ளதாக சவூதி பத்திரிகை முகமை (Saudi Press Agency) செய்தி வெளியிட்டுள்ளது.

இதே போல, ரியாத்தில் ஒரு மருந்தகம் மற்றும் ஒரு மாலில் நடந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சில இளைஞர்களை, ரகசிய ரோந்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த இளைஞர்கள் காசாளர்களைக் கத்தி முனையில் மிரட்டி 13000 சவூதி ரியால்களைக் கொள்ளையடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களிடம் இருந்த ஒரு திருடப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சில திருடப்பட்ட பொருட்கள், அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதோடு, வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னதாகவே அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக ரியாத் பிராந்திய காவல்துறை செய்தித் தொடர்பாளர் கர்னல் ஷேக்கர் அல்-துவைஜ்ரி (Col. Shaker Al-Tuwaijri) சவூதி பத்திரிகை முகமைக்குத் தெரிவித்துள்ளார்.

Related posts