hira street
image credits: Saudi Gazzette

ஜித்தாவின் ஹிரா தெருவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவழிப் போக்குவரத்து..!

ஜித்தா மாநகராட்சியில், மதீனா சாலை மற்றும் இளவரசர் சுல்தான் தெரு ஆகியவற்றிற்கு இடையில் வரலாற்று சதுக்கம் வரை உள்ள பகுதியில், ஹிரா தெரு வழியாக இருவழிப் போக்குவரத்து 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஓகாஸ்/சவூதி கெசட் செய்தி நிறுவனத்திடம் பேசிய, ஜித்தா மாநகராட்சியின் செய்தித் தொடர்பாளர் முகமது அல்-பக்மி, “2005 க்கு முன்னர் இருந்ததைப் போலவே தெருவில் மீண்டும் இரு திசைகளிலும் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.” எனக் கூறியுள்ளார்.

2005 ஆம் ஆண்டில், சாலையின் இருபுறமும் அமைந்துள்ள கடைகளுக்கு ஏதுவாக, ஜித்தா மாநகராட்சி இந்தத் தெருவை மேற்கு நோக்கிய ஒரே திசையில் வாகனங்கள் செல்லும்படி மாற்றியமைத்தது.

இருப்பினும், 2009 ஆம் ஆண்டில், மதீனா சாலை மற்றும் இளவரசர் சுல்தான் தெருவிற்கும்  இடையில் உள்ள தெருப் பகுதியை இரட்டிப்பாக்குவதற்கான சிறப்பு மாதிரிகளைத் தயாரிக்கும் பணியை ஜித்தா மாநகராட்சி தொடங்கியது. குறிப்பாக மதீனா சாலையானது இளவரசர் சுல்தான் தெருவைச் சந்திக்கும் இடங்களில் போக்குவரத்தைச் சீராக்குவதற்கு வசதியாக இந்த மாதிரிகள் தயாரிக்கப்பட்டன.

மதீனா சாலையை இளவரசர் சுல்தான் தெருவுடன் இணைக்கும் ஒரே தெரு இதுதான் என்பதனால்தான் மீண்டும் ஹிரா தெருவின் இரு திசைகளிலும் போக்குவரத்தை அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, ஜித்தா போக்குவரத்துத் துறையின் ஒத்துழைப்புடன், மாநகராட்சியின் ஆலோசகர்களால் மேற்கொள்ளப்பட்ட விரிவான போக்குவரத்து ஆய்வுகளின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related posts