longest service prisoner
Image Credit: Gulf News

சவூதியின் நீண்ட கால சிறைக் கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – எவ்வளவு முயன்றும் மன்னிக்க மறுத்த உறவினர்கள்

சவூதி அரேபியாவின் நீண்ட நாள் சிறைக்கைதியான ஹாடி பின் கடமா என்பவருக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, Erm News அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

1992 ஆம் வருடம், ஆசிர் பிராந்தியத்தின் தஹ்ரான் பகுதியில் வசித்த தன் உறவினரைக் கொலை செய்த குற்றத்திற்காக கடமாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சுமார் 28 வருடங்கள் சிறையில் இருந்தார். இவர் சவூதியின் நீண்ட நாள் சிறைக்கைதி ஆவார். இந்நிலையில் செவ்வாய் அன்று இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த இடைப்பட்ட வருடங்களில் பல முறை பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம் கடமா மன்னிப்பு கோரியும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை.

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பு கூட கடமா மன்னிப்பு கிடைக்க வாய்ப்பிருப்பதாக நம்பியிருந்திருக்கிறார். ‘நீங்கள் மன்னிப்பதன் மூலம் எனக்கு விடுதலை கிடைக்கும்’ என்று கோரிய கடமாவின் கடைசி வார்த்தைகள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டன.

கடந்த பிப்ரவரி மாதம், சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜீஸ், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் சமரசம் பேசுவதன் மூலம் விடுதலைக்கு முயன்று கொண்டிருந்த சில பழங்குடியினத் தலைவர்கள் உள்ளிட்ட மத்தியஸ்தர்களின் முயற்சியால் கடமாவின் மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடமாவின் கடைசிக் கடிதம் 

தனது கடைசிக் கடிதத்தில் கடமா தன் குற்றம் குறித்து விவரித்துள்ளார். “முதலில் நான் என்னை உங்களுக்கு அறிமுகம் செய்து கொள்கிறேன். நான் உங்கள் சகோதரன். கைதி, ஹாடி பின் சவுத் பின் கடமா அல் ஷெரீப் அல் ஹபாபி. என் துரதிர்ஷ்ட காலத்தில் என்னுடன் நின்று, என்னை மன்னித்து, என் விடுதலைக்கு உதவுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ” என்று அவர் அக்கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

” எனக்கும் அவருக்கும் நடந்த விவாதம் இருவரும் ஒருவரையொருவர் குத்திக் கொள்வதில் போய் முடிந்து விட்டது. அவர் நினைவிழந்து கீழே விழுந்ததும், நான் அவரை தஹ்ரானில் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தேன். காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் அப்போது அவர் உயிரோடுதான் இருந்தார்.” என அந்தக் கடிதத்தில் தனக்கும் தன் உறவினர் சுல்தானுக்கும் இடையே நடந்த தகராறைப் பற்றி நினைவுகூர்கிறார் கடமா.

இந்தக் கடிதத்தில், மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர், ஆசிர் பிராந்தியத்தின் எமீர் உட்பட அனைத்து உயர்மட்ட நபர்களையும், பழங்குடியினத் தலைவர்களையும் தன்னை விடுவிக்க உதவுமாறு கடமா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த முயற்சிகள் அனைத்தையும் மீறி, இறந்தவரின் குடும்பத்தினர் அவருக்கு மன்னிப்பு வழங்க மறுத்து, மரண தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

பயனற்றுப் போன முயற்சிகள் 

ஆசிர் பிராந்தியத்தின் எமிர் மற்றும் இளவரசர் துர்கி பின் தலால் ஆகியோர் கடமாவின் மரண தண்டனைக்கு சற்று முன்னர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைச் சந்தித்து, இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டு அவரை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டதாக, “Qahtan tribes” ட்விட்டர் கணக்கின் மூலம் தெரிய வந்துள்ளது.

மரண தண்டனைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட இது தொடர்பாக, தென்பகுதியைச் சேர்ந்த சில பழங்குடியினத் தலைவர்களும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைச் சந்தித்துள்ளனர். ஆனால், அனைத்து முயற்சிகளுமே தோல்வியில் முடிந்துள்ளன. கடாமாவின் விடுதலைக்காக சில செயற்பாட்டாளர்கள் முயன்றும் பயனில்லாமல் போயிற்று.

Related posts